PBT POST ADMIN அரசியல் கோவை திமுக மாநாடு: பயணிகள் அவதி
அரசியல்

கோவை திமுக மாநாடு: பயணிகள் அவதி

திருப்பூர் மாவட்டம் அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர், மேட்டுப்பாளையம், அன்னூர், கருமத்தம்பட்டி, கருவலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் பொதுமக்கள் அதிக அளவில் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் பெண்கள் பெரும்பாலும் இந்த சேவைகளை நம்பியே உள்ளனர்.

இந்நிலையில் கோவையில் நடைபெற்ற திமுக மாநாட்டிற்கு பொதுமக்களை அழைத்துச் செல்ல திருப்பூர் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான தனியார் பேருந்துகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவிநாசியில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு வழக்கமான நேரத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் குறைந்து, பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்தது.

தொடர்ந்து வந்த அரசு பேருந்துகளிலும் அதிக நெரிசல் காணப்பட்டதால், பேருந்தில் ஏறுவதற்காக பெண்கள் மற்றும் முதியவர்கள் முண்டியடித்து ஏற முயன்றனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் சில பெண்கள் பேருந்தின் கடைசி படிக்கட்டியில் நிற்கும் நிலையில் பயணம் செய்ய வேண்டிய அவலமும் ஏற்பட்டது. ஆண்கள், பெண்கள் என பலரும் படிக்கட்டுகளில் தொங்கியபடியே பயணித்தனர்.

இதுகுறித்து பேருந்துக்கு காத்திருந்த முதியவர் ஒருவர், “மாநாட்டிற்காக அனைத்து தனியார் பேருந்துகளையும் மாற்றி விட்டால் பொதுமக்கள் எப்படி பயணம் செய்வார்கள்?” என முதலமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். தனியார் பேருந்துகள் குறைவால் பொதுமக்கள் கடும் சிரமம் அனுபவித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Exit mobile version