April 16, 2026
CHENNAI - INDIA
சினிமா

நடிகர் பாக்யராஜ் செய்த துரோகம்

கசப்பான அனுபவத்தை பகிர்ந்த இயக்குநர் சுந்தர்ராஜன்

 

இயக்குநரும் நடிகருமான சுந்தர்ராஜன், தன் சினிமா வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் சந்தித்த கசப்பான அனுபவங்களை சமீபத்திய நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். பல வெற்றிப் படங்களை இயக்கியதுடன், நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தனது நண்பரும் நடிகர்-இயக்குநருமான பாக்யராஜுடன் ஏற்பட்ட மனவருத்தத்தை வெளிப்படுத்தினார்.

சுந்தர்ராஜன் கூறுகையில், தானும் பாக்யராஜும் கோவையில் உள்ள பாப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒரே பள்ளியில் படித்த நண்பர்கள் என்றும் தெரிவித்தார். சினிமாவுக்கான ஆர்வம் காரணமாக இருவரும் சென்னை வந்து, ஒரே அறையில் தங்கி வாய்ப்புகளைத் தேடியதாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.

அந்த காலத்தில் வெளியான ‘அவள் ஒரு தொடர்கதை’ திரைப்படம் இருவரையும் பெரிதும் பாதித்ததாகவும், திரைப்படம் இயக்காமல் சொந்த ஊருக்குச் செல்லக்கூடாது என முடிவு செய்ததாகவும் சுந்தர்ராஜன் கூறினார். இரட்டை இயக்குநர்களாக இணைந்து பணியாற்றுவோம் என திட்டமிட்டிருந்தாலும், பாக்யராஜ் நடிகராக அறிமுகமான பிறகு இருவருக்கும் இடையில் தூரம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஒருநாள் எதுவும் சொல்லாமல் பாக்யராஜ் அறையை காலி செய்து சென்றது தன்னை மிகவும் பாதித்ததாக சுந்தர்ராஜன் தெரிவித்தார். பின்னர் நாயகனான பாக்யராஜ் எழுதிய கடிதத்தில், ஊருக்குச் சென்று குடும்ப பொறுப்புகளை கவனிக்கச் சொல்லியிருந்ததையும், தானோ ஒரு வார்த்தை ‘நன்றி’ என பதில் எழுதியதாகவும் அவர் கூறினார். அந்த நேரத்தில் நண்பனை நம்பி இருந்தது வீணானது என்ற எண்ணமே அதிகமாக இருந்ததாக அவர் பகிர்ந்தார்.

மூன்று ஆண்டுகள் கழித்து பாக்யராஜ் நடித்த ‘மௌன கீதங்கள்’ படத்தை பட்டினியிலேயே பார்த்த அனுபவத்தையும் சுந்தர்ராஜன் கூறினார். அப்போது பாக்யராஜின் நடிப்பை பார்த்தபின், “நாம் இல்லையென்றாலும் இவன் வென்றிருப்பான்” என்ற உணர்வு தோன்றியதாக அவர் மனம் திறந்து தெரிவித்தார்.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video