எதிர்நீச்சல் 2 தொடரை விட்டு வெளியேறிய நடிகை கனிகா விளக்கம்

எதிர்நீச்சல் 2 தொடரிலிருந்து திடீரென விலகியதற்கான காரணம் குறித்து நடிகை கனிகா விளக்கம் அளித்துள்ளார். முதல் பாகத்தில் ஈஸ்வரி கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை கவர்ந்த அவர், தொடரிலிருந்து விலகியதற்கு பல்வேறு காரணங்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்ட நிலையில், தற்போது உண்மையான காரணத்தைத் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் 2022 ஆம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகளில் எதிர்நீச்சல் தொடரில் சிறப்பாக நடித்ததற்காக கனிகா சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதை பெற்றார். இதனுடன், மாரிமுத்து சிறந்த குணச்சித்திர நடிகராகவும், திருச்செல்வம் சிறந்த இயக்குநராகவும், ஸ்ரீவித்யா சிறந்த வசனத்திற்காகவும் விருது பெற்றதால் தொடர் பெரும் கவனம் பெற்றது.
இத்தகைய வெற்றியும் மாநில விருதும் கிடைத்த நிலையில் கனிகா தொடரிலிருந்து விலகியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதற்கு பதில் அளித்த அவர், நடிப்புத் துறைக்கு தற்செயலாக வந்ததையும், பின்னர் பல திரைப்படங்களில் நடித்தாலும் விருதுக்காக ஏங்கியிருந்ததையும் பகிர்ந்தார்.
திருமணத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கிய போது எதிர்நீச்சல் தொடரில் கிடைத்த விருது மகிழ்ச்சி அளித்ததாகவும், ஈஸ்வரி கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் திருச்செல்வத்திற்கு நன்றி தெரிவித்தார். அந்த பாத்திரம் தனது மீள்வரவை உறுதிப்படுத்தியதாகவும் கூறினார்.
தற்போது தனது மகன் 10ஆம் வகுப்பு படித்து வருவதால் அவனுடன் நேரம் செலவிட வேண்டும் என்ற எண்ணமே தொடரிலிருந்து விலக காரணம் என கனிகா விளக்கமளித்தார். இது திடீர் முடிவு அல்ல என்றும், இயக்குநர், சக நடிகர்கள் மற்றும் தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும் முன்பே தெரிவித்த முடிவுதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave feedback about this