
திருப்பூரில் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்படும் 8 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்த கவலைகளை எழுப்பியுள்ளதுடன், பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கடும் கண்டனம் தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்தது, டெல்லி போலீசார் வந்து கைது செய்யும் வரை தமிழக போலீசார் என்ன செய்தனர் என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.
மேலும், தமிழகத்தில் தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மத்திய தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஆனால் மாநில அரசின் நடவடிக்கைகள் தெளிவாக தெரியவில்லை என்றும் அவர் விமர்சித்தார். 2022ஆம் ஆண்டு கோவையில் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக நடந்த குண்டுவெடிப்பு வழக்கை எடுத்துக்காட்டிய அவர், அதில் பலர் கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டதாக நினைவூட்டினார்.
தமிழக மக்களின் பாதுகாப்பு அரசின் முதன்மை பொறுப்பாகும் என்பதையும், பயங்கரவாதத்துக்கு எதிராக அனைவரும் விழிப்புணர்வுடன் ஒன்றிணைய வேண்டும் என்பதையும் எல்.முருகன் வலியுறுத்தினார். வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தங்களது தீர்ப்பை வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave feedback about this