February 24, 2026
CHENNAI - INDIA
அரசியல்

அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு ஆசிரியர்கள் இல்லை — திமுக அரசுக்கு அன்புமணி இராமதாஸ் கண்டனம்

“தமிழரும் தொழில்நுட்பமும்” பாடம் கற்பிக்க பேராசிரியர்கள் நியமனம் அவசியம்; மாணவர்கள் படிக்காமலே தேர்வு எழுதும் நிலை என குற்றச்சாட்டு

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் முதலாமாண்டு பொறியியல் படிப்பில் இடம்பெற்றுள்ள “தமிழரும் தொழில்நுட்பமும்” என்ற பாடத்தைக் கற்பிப்பதற்கு உதவிப் பேராசிரியர்கள் ஒருவர் கூட இல்லை என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் இல்லாத சூழலில், தற்போது நடைபெற்று வரும் அகமதிப்பெண் தேர்வுகளில் மாணவர்கள் பாடத்தை முறையாக கற்காமலேயே தேர்வு எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் தமிழைப் பரப்பும் நோக்கில் 2021–22ஆம் ஆண்டு முதல் தமிழ்ப் பாடம் கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், அந்தப் பாடத்திற்காக நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்றும், எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து 328 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பின்னர் அவர்களின் ஒப்பந்தம் முடிவடைந்ததை காரணம் காட்டி கடந்த டிசம்பரில் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதால், கடந்த இரண்டு மாதங்களாக மாணவர்களுக்கு தமிழ்ப் பாடம் நடத்தப்படவில்லை எனவும் கூறினார்.
1965ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போரின் பின்னணியில் உருவான அரசியல் மாற்றத்தை நினைவுகூர்ந்த அன்புமணி இராமதாஸ், தமிழ்மொழி பாதுகாப்பை முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, இன்று வரை தமிழை வளர்க்க போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என விமர்சித்தார். தமிழை கட்டாயப் பாடமாக அறிவித்ததுடன் அதற்கான ஆசிரியர்களை நியமிக்காதது அரசின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்திலும் அதன் உறுப்புக் கல்லூரிகளிலும் தமிழ்ப் பாடம் முறையாக நடத்த தேவையான நிரந்தர ஆசிரியர்களை திமுக அரசு உடனடியாக நியமிக்க வேண்டும் என அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இந்த கருத்துகளை அவர் தனது X வலைதளப் பதிவில் வெளியிட்டுள்ளார்.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video