February 24, 2026
CHENNAI - INDIA
அரசியல்

ஓ.பி.எஸ். தி.மு.க.வுக்கு சென்றால் த.வெ.க.வுக்கு செல்வோம் – ஆதரவாளர்கள் திடீர் போர்க்கொடி

காஞ்சிபுரம் நிர்வாகிகள் உட்பட 75 பேர் விலகல்; நீலகிரியில் ஆதரவாளர்கள் கடும் எச்சரிக்கை


தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. முக்கிய கட்சிகள் கூட்டணி அமைப்பு, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்த கட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை வழிநடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேனி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் தற்போதைய சட்டசபைத் தேர்தலுக்கு அவர் எந்த கூட்டணியில் இணைவார் என்பது தெளிவாகவில்லை.

இந்த தேர்தலில் பா.ஜ.க.–அ.தி.மு.க. கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த அணியில் ஓ.பி.எஸ்.யையும் சேர்க்க முயற்சிகள் நடந்ததாக கூறப்படுகிறது. எனினும், எடப்பாடி பழனிசாமி தரப்பு அதற்கு சம்மதிக்காததால் ஓ.பி.எஸ். தனித்த நிலைப்பாட்டில் உள்ளார்.

இதனால் ஓ.பி.எஸ். அணியில் இருந்த முக்கிய நிர்வாகிகள் மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் அவரை விட்டு விலகி பிற கட்சிகளில் இணைந்துள்ளனர். மேலும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் உட்பட 75-க்கும் மேற்பட்டோர் விலகி த.வெ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருக்கு ஆதரவாக உள்ள எம்.எல்.ஏ. அய்யப்பன் ஆகியோர் தி.மு.க. அரசை பாராட்டி பேசியது அரசியல் வட்டாரத்தில் புதிய பேசுபொருளாக மாறியுள்ளது. சமீபத்தில் சட்டசபை வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பி.எஸ். சந்தித்ததும் கவனம் ஈர்த்தது.

அந்த சந்திப்புக்கு பிறகு தி.மு.க. அரசு மற்றும் முதலமைச்சரை பாராட்டி ஓ.பி.எஸ். பேசியது, அவர் தி.மு.க. கூட்டணிக்கு நெருங்கி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதும் நிலையை உருவாக்கியுள்ளது. ஆனால் இதுகுறித்து அவர் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் மாவட்ட செயலாளர் பாரதியார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பந்தலூர், கூடலூர் பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுக்கு சென்றால் அவருடன் யாரும் செல்லமாட்டோம்; அப்படியான முடிவு எடுக்கப்பட்டால் அணியை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என ஆதரவாளர்கள் எச்சரித்தனர். மேலும் தி.மு.க.வை விட ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வாக தேர்தலை சந்திக்க வேண்டும் என்றே பெரும்பாலானோர் கருத்து தெரிவித்ததாக கூறப்பட்டது.

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என ஓ.பி.எஸ். முன்பு கூறியிருந்தாலும், தை மாதம் முடிந்து மாசி தொடங்கிய நிலையில் அவர் தெளிவான முடிவு எடுக்காதது ஆதரவாளர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஓ.பி.எஸ்.யின் அடுத்த அரசியல் முடிவு தமிழக அரசியல் சூழலை பாதிக்கக்கூடியதாக பார்க்கப்படுகிறது.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video